தஞ்சாவூர்
மத்திய பாஜக அரசு 33% இட ஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்யாமல் பெண்களை ஏமாற்றுவதாக இந்திய மகளிர் சம்மேளனம் குற்றம் சாட்டி உள்ளது.
அகில் இந்திய மகளிர் தேசிய சம்மேளனத்தின் மாநிலக் குழுக் கூட்டம் தஞ்சை மாவட்டத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதாவாதி தலைமை தாங்கினார். மாநில செயலர் மஞ்சுளா சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் மத்திய பாஜக அரசு பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு அளிக்கவில்லை எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில், “கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டிற்கான மசோதா முதன்முதலாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு 2010 மார்ச் 10ல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. நால் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ள மத்திய பாஜக அரசு 33% இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவை மக்களவையில் இதுவரை தாக்கல் செய்யாமல் பெண்களை ஏமாற்றி வருகிறது.
மகளிர் நலனில் அக்கறையுள்ள தமிழக அரசு சட்டமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான தனித் தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கு, செயல் திட்டங்களுக்கு நிர்பயா நிதியைத் தமிழகத்தில் முறையாக, முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார்.