டெல்லி:
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இன்று காலை ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. குடியுரிமை மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில், முதல் வழக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கை தாக்கல் செய்துள்ளது.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதாப்படி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாது என்றும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளிலி ருந்து வந்திருக்கும் இந்து, சீக்கியர், கிறித்துவர், பார்சி, புத்தம், ஜெயின மதம் சார்ந்த மக்கள் 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது; இந்திய முஸ்லிம்களுக்கும் இந்த மசோதாவுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் எப்போதும் இந்திய குடிமக்களாகவே இருப்பார்கள் என்று உறுதி அளித்தார்.
இந்த மசோதாவால் சிறுபான்மையினர் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசு விளக்கமும், உறுதி அளித்த பிறகும் அதனை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டன. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. விரைவில் சட்டமாக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு தடை கோரி, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.