மும்பை

தென் ஆப்பிர்க்காவுக்கு எதிரான இந்திய டி 20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 போட்டிகள் ஜூன் 9 ஆம் தேதி  தொடங்குகின்றன. இந்நிலையில், இதில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் அணித்தலைவர் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அணியின் தற்காலிக அணித்தலைவராக கே.எல்.ராகுலும், துணை அணித்தலைவராக ரிஷப் பந்தும் செயல்படுவார்கள்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஸ்னாய், அக்சர் பட்டேல், புவனேஸ்வர்குமார், ஹர்சல் பட்டேல், அவேஷ் கான், ஆர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தற்போதைய ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 413 ரன்களை எடுத்துள்ள ராகுல் திரிபாதிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.  தற்போது 31 வயதாகும் அவர் கடந்த 2010 முதல் மகாராஷ்டிரா அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். மேலும் 2017 முதல் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார்.

அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது கேள்விக்குறியாகி உள்ளது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் போது அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்குவது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பேசி இருந்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை  இதனால் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.