பெங்களூரு: உலகின் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியர்கள் தங்களுடைய நாளின் கணிசமான பொழுதை, தங்களுடைய அலுவலகம் செல்வதற்கான சாலைப் போக்குவரத்திலேயே கழிக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதாவது, ஒரு நாளில் 2 மணிநேரத்திற்கும் அதிகமாக அவர்கள் அலுவலகம் செல்வதற்கான சாலைப் போக்குவரத்திலேயே செலவிடுகிறார்கள். அவர்கள் 1 கி.மீ. தூரத்தைக் கடக்க 3 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.
பெங்களூரு, ஐதராபாத், சென்னை, புனே, மும்பை மற்றும் புதுடெல்லி ஆகிய நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த 6 நகரங்களோடு ஒப்பிடுகையில், பெங்களூரில் ஒரு கி.மீ. தூரத்தைக் கடக்க 2 நிமிடங்கள் மற்றும் 26 நொடிகள் ஆகிறது.
இந்த நகரங்களோடு ஒப்பிடுகையில் சென்னை வேகம் மிகுந்த நகரமாக இருக்கிறது. அங்கே ஒரு மணிநேரத்தில் 25.7 கி.மீ. தூரம் கடக்கப்படுகிறது. அதேசமயம், பெங்களூரில் ஒரு மணிநேரத்திற்கு 18.7 கி.மீ. தூரமும், மும்பையில் 18.5 கி.மீ. தூரமும், ஐதராபாத்தில் 21.2 கி.மீ. தூரமும், டெல்லியில் 20.6 கி.மீ. தூரமும் கடக்கப்படுகிறது.