மும்பை: ‍நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், சந்தை எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்ற நிலை ஏற்பட்டதால், மும்பை பங்குச் சந்தையில் பலத்த சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தை சரிந்ததற்கு முக்கிய காரணம், முதலீட்டாளர்கள் மிக அதிகமான எதிர்பார்ப்பில் இருந்ததோடு, நீண்டகால மூலதன ஆதாய வரி குறைப்பு, துறைகளுக்கான பெரியளவு சலுகைகள் எதுவும் இல்லாதது உள்ளிட்டவை சந்தை முதலீட்டாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 988 புள்ளிகள் சரிந்து, 40 ஆயிரம் புள்ளிகள் என்ற அடையாள நிலையிலிருந்தே குறைந்தது. நேற்றைய வர்த்தகத்தின்போது, நாளின் உச்ச நிலையிலிருந்து, 1,275 புள்ளிகள் அளவுக்கு சரிவை சந்தித்து, 987.96 புள்ளிகள் அளவுக்கு சரிவுடன் 39735.53 புள்ளிகளில் வந்து நின்றது.

வர்த்தக நடவடிக்கைகளின்போது, சென்செக்ஸ் அதிகபட்சமாக 40905.78 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 39631.24 புள்ளிகளையும் தொட்டது.

இதைப்போலவே, தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’ 300.25 புள்ளிகள் சரிவை கண்டது. 2019ம் ஆண்டு பட்ஜெட்டின்போது இருந்த 11811.15 புள்ளிகளைவிட குறைந்து, இந்த பட்ஜெட்டின்போது 11661.85 புள்ளிகளாக சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தில், ஐ.டி.சி., நிறுவனம் அதிகபட்சமாக, 6.97 சதவீதம் சரிவை கண்டது.

மேலும், எல்&டி, எச்டிஎப்சி, எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ, இண்டஸ்இண்ட் ஆகிய நிறுவன பங்குகளும் வீழ்ச்சியை சந்தித்தன.