டெல்லி: ரயில்களில் படுக்கை வசதியுள்ள பெட்டியில் பயணிக்கும்  தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில், சிறிய பெர்த் வசதி ஏற்படுத்தப்பட்டு  உள்ளது. இந்த படுக்கை வசதி சில ரயில்களில் அறிமுகம் செய்யப்படுள்ளது.

தொலைதூர பயணத்திற்காக பயணிகள் பெரும்பாலும் படுக்கை வசதிகளைகொண்ட ரயில்களிலேயே பயணம் செய்கின்றனர். ஆனால், குழந்தைகளோடு பயணம் செய்யும் பெண்களுக்கு இந்த படுக்கை வசதி போதுமானதாக இல்லை. இதனால், அவர்கள் இரவில் சரியான முறையில் தூக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பல தாய்மார்கள் குழந்தைகளின் படுக்கை வசதிக்காக தனிக்கட்டணம் செலுத்தி பெர்த் வாங்கி வருகின்றனர். இதற்கு முழு பெர்த் ஒதுக்கினாலும் பாதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால்,  ரயில்வே நிர்வாகத்துக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறப்பட்டது. இதையடுத்து குழந்தைகளுக்கு தனி பெர்த் கொடுக்கும் முறை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில்,  தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் புதிய படுக்கை வசதி தற்போது ரயில்களில் அறிமுகம் செய்யப்பட  உள்ளது. இந்த வசதி குறித்து,  அன்னையர் தினமான மே 8ந்தேதி இந்தியன் ரயில்வே இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

வடக்கு ரயில்வேயில் லக்னோ மெயில் ரயிலின் முன்பதிவு பெட்டியில், பெண்கள் பயணம் செய்யும்போது அவர்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்கும் வகையில் புதிய படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமான, படுக்கை வசதிக்கு பக்கத்திலேயே குழந்தைகென்று பிரத்யேகமாக சிறிய அளவிலான பெர்த் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தை உருண்டு கீழே விழாமல் இருக்க சீட்டில் ஒரு இரும்பு கம்பியும் பொருத்தப்பட்டுள்ளது.

தாயின் சீட்டை ஒட்டியே குழந்தைக்கான சீட்டும் பொருத்தப்பட்டுள்ளது. முன்பதிவு பெட்டிகளில் பெண்கள் பயணம் செய்யும்போது, அவர்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்க, புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட துாரம் செல்லும் முக்கியமான 70 விரைவு ரயில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் ஏசி முன்பதிவு பெட்டிகளில், இந்த வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேபி பெர்த்தானது, ரயில் பெட்டியில் உள்ள கீழ் படுக்கையில் (லோயர் பெர்த்) இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை படுக்க வைக்க வசதியாக 770 மிமீ நீளத்திலும் 255 மிமீ அகலத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.  பெர்த்தின் ஓரப்பகுதியில் இரும்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளதால், கீழ் படுக்கையில் தாய்மார்கள் தங்களின் அருகிலேயே குழந்தையை பத்திரமாக படுக்க வைத்துக் கொள்ள முடியும்.

பேபி பெர்த் தேவையில்லாத பட்சத்தில் ஸ்டாப்பர் மூலம் அதை மடித்து வைக்கலாம். இந்த வசதி லக்னோ மெயில் ரயிலில் கடந்த மாதம் 27ம் தேதி சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பயணிக்கும் தாய்மார்களின் கருத்துக்களை கேட்டறிந்து நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர்.