டெல்லி: கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெறும் அவகாசத்தை ஒன்பது மாதங்களாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலின் போது 2020ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி முதல் ஜூன் 31 வரை நாடு முழுதும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. அப்போது ரயில்களில் பயணிக்க நேரடியாக ‘டிக்கெட்’ முன்பதிவு செய்தவர்கள் அதை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டது.
பயண தேதியில் இருந்து 6 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையில் முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெறும் அவகாசத்தை ஒன்பது மாதங்களாக மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது குறித்து ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அந்த அறிவிப்பில், முன்பதிவு டிக்கெட் தொகையை திரும்ப பெறுவதற்கான கால அவகாசத்தை 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. 6 மாதங்கள் முடிந்த பிறகு, பல பயணிகள், பயணச்சீட்டுகளை ரயில்வே மண்டல அலுவலகத்திலோ அல்லது டிடிஆர் மூலமாகவோ அல்லது பொது விண்ணப்பம் மூலமாகவோ தாக்கல் செய்திருக்கலாம்.
முன்பதிவு மையங்களில் வாங்கிய அந்த பயண சீட்டுகளுக்கு, பயணிகள் முழு கட்டணத்தையும் திரும்பப் பெற அனுமதிக்கப்படுவர் என்று அந்த அறிவிப்பில் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.