மாநில அரசுகளை டிக்கெட் விற்கச் சொல்லும் ரயில்வே..

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஒரு லட்சம் , இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்ற எண்ணிக்கையில் கிடைத்த வேலைகளைப் பார்த்துப் பிழைத்து வந்தனர்.

மத்திய அரசு அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக அவர்கள், பிழைக்கப்போன மாநிலங்களில் பிச்சை எடுக்காத குறையாக நடைப்பிணம் போல் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

 இரு நாட்களாக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் , அந்த தொழிலாளர்களை, இந்திய ரயில்வேயின் உத்தரவுக்கு இணங்க, சிறப்பு ரயில்கள், அழைத்துச் சென்று ,சொந்த மாநிலங்களில் இறக்கி விடுகின்றன.

இந்த ரயில்களில் பயணம் செய்யும் தொழிலாளர்களிடம் இருந்து ,மாநில அரசுகளே டிக்கெட் கட்டணத்தை வசூலித்து,பணத்தை தங்களிடம் மொத்தமாக ஒப்படைக்குமாறு, ரயில்வே இலாகா , சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

‘’ஊரடங்கைத் தானாக அறிவித்த மத்திய அரசு, அதன் காரணமாக அவதிப்படும் தொழிலாளர்களையும், சொந்த ஊருக்கு அனுப்பும் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

‘பெரும் பணக்காரர்கள் செலுத்த வேண்டிய கடனை ரத்து செய்வீர்கள்? ஆனால் ஒன்றும் இல்லாத ஏழைகளிடம் இருந்து பணத்தை வசூல் செய்வீர்கள். இது என்ன நியாயம்?’’ என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

 ‘’வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் மக்களைச் சிறப்பு விமானம் அனுப்பி அழைத்து வரும் மத்திய அரசு, உள்ளூர் மக்களிடம் காசு வசூலிப்பது முறையா?’’ என்றும் சரமாரியாக மத்திய அரசை நோக்கி கேள்விக்கணைகள் பாய்ந்துள்ளன.

–  ஏழுமலை வெங்கடேசன்