சர்வதேச தரநிலை புத்தக எண் (ஐஎஸ்பிஎன்)யைப் பெறுவதற்கான நடைமுறைக்கு மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர், இந்திய நூல் அச்சகத் துறை மிகுந்த சிக்கலைச் சந்தித்துள்ளது.

ஒப்பீட்டளவில், இதுவரை ISBN எண் பெறும்  முறை மிகவும் எளிமையானதாகவே இருந்து வந்தது. ஆனால், இந்தச் செயல்முறை ஆன்லைன் முறைக்கு மாறியப் பிறகு, ஐஎஸ்பிஎன் பெறுவது மிகவும் சிக்கலான மற்றும் கடினமானதாகவே  மாறிவிட்டது. அதுமட்டுமின்றி தேவையில்லாத காலதாமதம் மற்றும் நூல்கள் தணிக்கை செய்யப்படுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது எனப் புத்தக வெளியீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வரலாற்றினை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், முப்பதாண்டுகளுக்கு முன்னர், இந்திய புத்தக வர்த்தக உறுப்பினர்கள் சிலர் நமது நாட்டில் ஐ.எஸ்.பி.என்.களின் பயன்பாட்டைப் பிரபலப்படுத்த எண்ணி, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் (எம்.எச்.ஆர்.டி) நெருக்கமாகவும், உறுதியுடனும் செயல்பட்டனர்.

ஐ.எஸ்.பி.என். எண் உதாரணம் (ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு எண் வழங்கப்படும். ஒரு புத்தகத்தை வாங்க மிகவும் எளிதாகக் குறிப்பிட பயன்படும்)

ஐஎஸ்பிஎன் என்பது ஒரு தனிப்பட்ட அடையாளங்காட்டும் எண் ஆகும் – முன்னர் இது  பத்து இலக்கங்கள், மிகச் சமீபத்தில் 13 இலக்க எண்ணாக உயர்ந்தது –  உலகில் வெளியிடப்படும் ஒவ்வொரு புத்தகத்தின் ஒவ்வொரு பிரதியிலும் தோன்றும் ISBN க்கு எந்தச் சட்டபூர்வமான தேவையும் இல்லை, மேலும் அதனால் எந்தச் சட்ட பாதுகாப்பும் இல்லை என்றாலும், இந்தப் புத்தக தயாரிப்பு எண்ணானது வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் நூலகங்களுக்கான ஆர்டர், பட்டியல் மற்றும் பங்குக் கட்டுப்பாட்டு ஆகியவற்றிற்கு பேருதவியாய் இருந்து வருகின்றது. 1980 களில் இந்திய வெளியீட்டாளர்கள் தங்களது புத்தகங்களில் ஐ.எஸ்.பி.என் களைப் பயன்படுத்தச் சிரமப்பட்டு பழகிவந்த நிலை மாறி இன்றைய கணினிமயமாக்கப்பட்ட மற்றும் டிஜிட்டல் சகாப்தத்தில் வளர்ந்துவரும் உலகளாவிய புத்தக வர்த்தகத்திற்கு இன்று எந்த ஒரு வெளியீட்டாளர் அல்லது எந்த ஒரு பதிப்பாளரும் ஒரு புத்தகத்திற்கு ஒரு ISBN ஒதுக்காமல் வெளியிடுவதை கற்பனை கூடச் செய்துவிட முடியாது. இதுதான் இந்த எண்ணைப் பிரபலப் படுத்த எடுக்கப்பட்ட முயற்சியின் வெற்றி.

1970 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் ISBNs எண் வந்தபின்னர், ISBN களை ஒவ்வொரு நாட்டிலும் முறைப்படுத்தி வெளியிட ஒவ்வொரு அமைப்பிடம் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. இந்தியாவில், அந்தப் பொறுப்பு மனிதவள மேம்பாட்டுத் துறையின் (MHRD) கட்டுப்பாடில் இயங்கும் ராசா ராம்மோகன் ராய் நூலகம் (RRRL) வசம் அளிக்கப் பட்டது.
புது டில்லி கஸ்தூர்பா காந்தி சாலையில் உள்ள இந்த நூலகத்திற்கு ஒரு அஞ்சலட்டையில் விண்ணப்பம் எழுதுவதன் மூலம் மிக எளிதாக இதுவரை ஐ.எஸ்.பி.என் எண் ஒதுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், 2016 ஆம் ஆண்டில் மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ISBN பெற ஆன்லைன் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது, புதிய அல்லது கூடுதல் ஐஎஸ்பிஎன் எண் பெற ஆன்லைனில் பதிவு மற்றும் பயன்பாட்டின் செயல்முறையை உருவாக்கியது. அப்போதிலிருந்து, புத்தகம் வர்த்தகத்தில் ISBN எண் பெறுவது ஒரு புரியாத புதிராக மாறிபோனது.ஆன்லைனில் விண்ணப்பித்துக் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து 100 எண்களுக்கு பதிவுச் செய்தவர்களுக்கு வெறும் பத்து எண்கள் தான் ஒதுக்கப்பட்டு இருப்பதும். மீதம் உள்ளவை விண்ணப்பம் ‘முழுமையற்றதாக’ இருந்து எனக் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு என்ன அர்த்தம் என்று எந்த விளக்கமும் அளிக்கப் படவில்லை. தற்போது ஐ.எஸ்.பி.என். எண் பெறுவது மிகவும் சிக்கலான, காலதாமதப்படுத்தும் செயல்முறையாக மாறிப் போய்விட்டதாகப் பெரும்பாலான புத்தக வெளியிட்டாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், புத்தகம் வெளியிடும் பதிப்பகத் துறை இந்தியாவில் வளர்ந்து வருகிறது. உலகளாவிய புத்தக வெளியீட்டுக்கான வளர்ச்சி விகிதம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெறும் 2% வளர்ச்சி பெறும். ஆனால் இந்திய பதிப்பகத் துறை வரும் 2020 ஆம் ஆண்டுவரை, சராசரியாக 19.3 சதவிகிதம் வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு $ 6.76 பில்லியன் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் வெளியிடப்பட வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. ஆனால், தற்போதைய ஆன்லைன் சஞ்சலத்தினால், இந்தப் புத்தகங்களுக்கு ISBN கள் பெருவதென்பது ஒரு நரக வேதனையாக இருப்பதாக வெளியீட்டாளர்கள் நினைக்கிறார்கள்.
பொதுவாக பதிப்பக வெளியீட்டின் தொடக்கத்தில் நூலாசிரியருடன் ஒப்பந்தம் கையொப்பமிட்ட நேரத்தில் ஐ.எஸ்.பி.என் கள் பெறப்பட்டு வந்தன. ஆன்லைன் விற்பனையின் வளர்ச்சியின் மூலம் உலகளாவிய சந்தைகலை எளிதில் அணுக முடிவதால், ISBN கள் வர்த்தக புத்தக விற்பனையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், புத்தக திரட்டிகள் மற்றும் புத்தகக் கூடங்களுக்கும் எளிய வாய்ப்பினை அளிக்கின்றன.

ராஜா ராம்மோகன் ராய் இணையத்தளம் ‘வெறும் 7 நாட்களில் ISBN களைப் பெறுங்கள்’ என்ற விளம்பரப்படுத்தலை தொடர்ந்து வந்தாலும், ஒரு பதிப்பக உரிமையாளர், கடந்த 8 மாதங்களாக ஐஎஸ்பிஎன்ஸிற்காக விண்ணப்பித்துக் காத்திருக்கின்றார்.
வாடிக்கையாளர் தொடர்பு கொள்ள இணையத்தளத்தில் ஒரு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் கூட இடம்பெறவில்லை என்பதால், பிரசுரிப்பாளர்கள் யாரை தொடர்பு கொள்வதெனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இந்தியாவில் பெரிய அளவில் பதிப்பக நிறுவனங்கள், குறிப்பாகச் சிறிய பதிப்பகங்கள் தனியுரிமைகள் பெற்றவையாகும். இந்தியச் சட்டத்தின்படி ஒரு தனியுரிமை பெற்ற ஒரு பிரசுரிப்பாளர் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயமில்லை. இது வழக்கத்தில் இருந்தபோதிலும், ஆன்லைன் படிவத்தில் பதிவு எண் மற்றும் ஆவணம் கேட்பதும், அதனைச் சமர்ப்பிக்காமல் மேலும் விண்ணப்பத்தை தொடர முடியாத நிலை நிலவுகின்றது.
உலகில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் சுய-பிரசுரிப்பும், ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஐந்து முதல் ஆறு அதிகம் விற்பனையாகும் தலைப்புகள் சுயமாக வெளியிடப்படுபவை, ஆனால், ஐஎஸ்பிஎன் எண் வழங்குவதில் உள்ள காலதாமதம் ஏற்புடையதல்ல.

விண்ணப்ப செயல்முறையைப் பற்றி மிகவும் கவலைப்படுவது என்னவென்றால், அனைத்து பதிப்பகங்களும் முதலில் NITI Aayog-யில் , வில்லங்கமில்லா சன்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்பதாகும். புத்தக வெளியீட்டிற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத NITI Aayog-ல் ஏன் சான்றிதழ் பெற வேண்டும் எனப் பதிப்பகத்தார் வினவுகின்றனர். இது ஒரு கண்காணிப்பு முறையாக மாறி வருகின்றது. ஏர்கனவே கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் இயங்கும் மோடி அரசு நசுக்கி வருகின்றது. இந்த வேலையில் இது போன்ற நடவடிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஐஎஸ்பிஎன் எண் பெறுவது வெளிநாடுகளில் ஒரு எளிதான வழிமுறையாகும். ஒரு வெளியீட்டாளர் வேறு நாட்டிலிருந்து ஒரு ISBN ஐ வாங்க முடியாது என்று எங்கும் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே புத்தக வெளியீட்டாளர்கள் மற்றொரு நாட்டிலிருந்து ஐ.எஸ்.பி.என் எண் வாங்க முடிவு செய்தால், இந்திய புத்தகங்கள் UK, US அல்லது பிரேசிலியன் ஐஎஸ்பிஎன்களுடன் வெளியிடப்படும் என்பது மறுக்க முடியாது.

டிஜிட்டல் இந்தியா எனக் கூறும் மோடி அரசு, ஒரு அஞ்சலட்டையின் மூலம் எளிதான முறையில் கிடைக்கப்பெற்ற ISBN எண்ணை எட்டுமாதமாகியும் கிடைக்காத ஆன்லைன் முறையாக மாற்றியதன் பின்னால் உள்ள மர்மம் என்ன ? பதிப்பகத்தார் அஞ்சுவது போல் கண்காணிக்கின்றதா? மாற்றுக்கருத்துக்களை வெளியிடும் பதிப்பகங்கள் கட்டுப்படுத்தப் படுகின்றனவா ?