வாஷிங்டன்
அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கண்ணீர்ப் புகை குண்டால் பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் துபே என்னும் ஒரு இந்திய வம்சாவளி இளைஞர் உதவி உள்ளார்.

கடந்த வாரம் காவல்துறையினர் ஜார்ஜ் ஃபிளாயிட் என்னும் ஒரு கறுப்பின இளைஞரை கள்ள நோட்டு குற்றத்தில் கைது செய்தனர். அப்போது ஒரு காவல் அதிகாரி அவருடைய கழுத்தைக் காலால் மிதித்ததில் அவர் மூச்சுத் திணறி உயிர் இழந்தார். ஏற்கனவே நிற வெறித் தலைவிரித்தாடும் அமெரிக்காவில் இந்நிகழ்வு கடும் போராட்டத்தைத் தூண்டி விட்டுள்ளது. காவல்துறையின் கொடுமையை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வாஷிங்டனில் கடந்த திங்கள் அன்று போராட்டக்காரர்கள் அதிபர் இல்லமான வெள்ளை மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களைத் தேசிய பாதுகாப்புப் படையினர் அடித்து நொறுக்கி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர். மேலும் உடனடியாக அந்த பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

வாஷிங்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான ராகுல் துபே என்னும் 44 வயது இளைஞர் போராட்டக்காரர்களை அடித்து நொறுக்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் உடனே தனது வீட்டின் கதவுகளைத் திறந்து அனைவரையும் உள்ளே அழைத்துள்ளார். அடிபட்டு மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் துபேயின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களுக்குக் கண்களைக் கழுவப் பாலை கொடுத்த துபே ஊரடங்கு காரணமாக அவர்களைத் தனது வீட்டில் இரவு முழுவதும் தங்க அனுமதித்துள்ளார்.
போராட்டக்காரர்களை துரத்தி வந்த காவல்துறையினர் இரவெல்லாம் அவர்களைத் தேடி விட்டு சென்றுள்ளனர். அதன்பிறகு காலையில் ராகுல் துபே இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பலரும் அவருக்குப் புகழ்மாலை சூட்டும் வேளையில் துபே தாம் ஒன்றும் அவ்வளவு பெரிய சேவை செய்யவில்லை எனவும் தமது மகனும் இவர்களைப் போல் நியாயத்துக்குப் போராடுபவனாக வளர வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]