வாஷிங்டன்

இன்று வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்தில்  தரை இறங்கி உள்ள பெர்சவரன்ஸ் ரோவரை (Perseverance rover) வழிநடத்திய இந்திய வம்சாவளி பெண் குறித்த விவரங்கள் இதோ

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாயின் மத்திய ரேகை பகுதியில் தனது பெர்சவரன்ஸ் ரோவர் என்னும் இயந்திரத்தைத் தரை இறக்கி உள்ளது.  இந்த இயந்திரம் ஆறு சக்கரங்களைக் கொண்டதாகும்.  இன்னும் இரு ஆண்டுகளுக்கு இந்த இயந்திரம் செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் இதற்கு முன்பு அங்கு உயிரினங்கள் வாழ்ந்த ஆதாரங்களை தேடுவது போன்ற பணிகளை செய உள்ளது.

செவ்வாய்க் கிரகத்தில் உள்ள ஜெசெரோ பகுதியில் பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய ஏரியும் அதில் நீர் நிரம்பி இருந்ததாகவும் நம்பப்படுகிறது.  ஆகவே அந்த பகுதியில் உயிரினங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.    கடந்த 18 ஆம் தேதி செவ்வாயில் தரை இறங்கிய ரோவர் உடனடியாக ரெசல்யூஷன் குறைவான இரு படங்களை அனுப்பி உள்ளது.

 

இந்த திட்டத்தை வழி நடத்தியதில் ஸ்வாதி மோகன் என்னும் இந்திய வம்சாவளி பெண் முக்கிய பங்காற்றி உள்ளார்.  மார்ஸ் 2020 விண்கலம் சரியான பாதையில் பயணிக்கச் செய்வதில் இருந்து ரோவர் இயந்திரத்தைத் தரை இறக்குவது வரையிலான பணிகளுக்கு இவர் பொறுப்பேற்று நடத்தி உள்ளார்.   இவர் ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர் ஆவார்.

இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பிரிவில் இயந்திரவியல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.  பிறகு எம் ஐ டியில் ஏரோநாட்டிக்ச் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தனது 16 வயது வரை குழந்தை மருத்துவராக விரும்பிய ஸ்வாதி தனது மற்றொரு விருப்பமான விண்வெளி நிபுணராகும் ஆசையுடனும் இருந்தார்.

இவர் தனது 9 ஆம் வயதில் ஸ்டார் டிரெக் என்னும் அறிவியல் தொலைக்காடசி  தொடரை  கண்ட போது அதில் வருவது போல் விண்வெளியில் உள்ள பல புதிய பகுதிகளைக் கண்டறிய ஆர்வம் கொண்டிருந்தார்.  தனது 18 ஆம் வயதில் இயற்பியல் வகுப்பில் இணைந்த போது விண்வெளி ஆர்வம் அதிகரித்து விண்வெளித்துறை கல்வியை தொடர்ந்து தற்போது உலகின் முக்கிய விண்வெளி நிகழ்வில் பொறுப்பாளர் ஆகி உள்ள ஸ்வாதிக்கு உலகெங்கும் இருந்து பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளன..