லண்டன்: பிரிட்டனில் இன்றுமுதல் பொதுமக்களுக்கு பிஃபைசர் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்து வரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களில் ஹரி சுக்லா (வயது 87) என்பவருக்கு முதன்முதலாக தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஓராண்டுகளை கடந்தும், அதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அதற்கான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிகழ்வுகள் இந்த மாதம் முதல் (டிசம்பர் 2020) தொடங்கி உள்ளது. ஏற்கனவே ரஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், இன்றுமுதல் இங்கிலாந்தில், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன.
இங்கிலாந்து நாடு ஏற்கனவே ஃபைசர் (Pfizer) நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு ஆர்டர் வழங்கிய நிலையில், இன்று முதல் பொதுமக்களுக்கு கொடுக்க பிரிட்டன் அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து பிரிட்டனில் இன்று முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மொத்தம் 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக சுகாதாரத்துறை முன் களப்பணியாளர்கள், முதியோர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் தடுப்பூசி, 90வயதான மார்கரெட் கெனன் என்ற மூதாட்டிக்கு போடப்பட்டது. அதையடுத்து 2வது தடுப்பூசி வில்லியம் சேக்ஸ்பியர் (வயது 81 ) என்பவருக்கு போடப்பட்டது.
இந்த நிலையில், இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களில் முதல் கொரோனா தடுப்பூசியை பிரிட்டனில் வசித்து வரும் ஹரி சுக்லா (வயது 87) என்பவருக்கு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஹரி, ‘கொரோனா தடுப்பூசி குறித்து தனக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இதில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் உற்சாகமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும, தொற்றுநோயின் முடிவை நோக்கி நாம் வந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு தடுப்பூசி போடப்பட்டது சந்தோஷமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.