அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் இந்திய இசை கலைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கர்நாடகா மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள கக்கேரா நகரத்தைச் சேர்ந்த தபேலா கலைஞரான சாம்ராட் கக்கேரி (45) கலிபோர்னியாவின் மிடில்டவுன் அருகே ஹார்பின் ஸ்பிரிங்ஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயங்கர விபத்தில் மரணமடைந்தார்.

கடந்த 15 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வரும் சாம்ராட் கக்கேரி, கலிபோர்னியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அமெரிக்காவில் உள்ளூர் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை, சாம்ராட் கக்கேரியின் கார் மற்றும் லாரி இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த விபத்தில், சாம்ராட் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவருடன் இருந்த மற்றொருவர் படுகாயமடைந்தார்.

சாம்ராட் கக்கேரி தனது தந்தையும் இசைக்கலைஞருமான மோகன் ராவ் கக்கேரியிடம் இசை கற்றுக்கொண்டார்.

எம்பிஏ பட்டதாரியான சாம்ராட் தனது மனைவி மற்றும் மகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிக்கும் கலைஞர்களுக்கு சாம்ராட் தபேலா இசைக்கருவிகளை வழங்குவார். சமீபத்தில், அவர் இந்துஸ்தானி பாடகர் கைவல்ய குமார் குராவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தினார்.