டில்லி

ந்திய மொபைல் மற்றும் மின்னணு கூட்டமைப்பு இந்த வருடம் மொபைல் பாகங்கள் உற்பத்தி ரூ.70000 கோடியை தாண்டும் என அறிவித்துள்ளது.

 

இந்தியா பல நாடுகளுக்கு மொபைல் பாகங்கள் உற்பத்தி செய்து அனுப்பி வருகிறது. அத்துடன் சர்வதேச புகழ் பெற்ற மொபைல் நிறுவனங்களும் தங்கள் உற்பத்தி தொழிற்சாலையை நாடெங்கும் நிறுவி உள்ளன. அது மட்டுமின்றி சீன மொபைல் பாகங்களை விட இந்திய மொபைல் பாகங்கள் தரமாக உள்ளதாக மொபைல் உற்பத்தியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய மொபைல் மற்றும் மின்னணு கூட்டமைப்பு தலைவர் பங்கஜ் மகேந்துரு ஒரு கூட்டத்தில் பேசும் போது, “இந்தியாவில் மொபைல் பாகங்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளுக்கு உலகெங்கும் உள்ள மொபைல் உற்பத்தியாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு உள்ளது. சீன தயாரிப்புக்களை விட இந்திய தயாரிப்பு விலை சற்றே அதிகமாக இருந்தாலும் தரத்தில் மிகவும் நன்கு உள்ளதால் பலரும் இந்திய போர்டின் மீது ஆர்வம் செலுத்துகின்றனர்.

அத்துடன் உலகெங்கும் மொபைல் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் சார்ஜரகளுக்கு தற்போது வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டு ஏற்றுமதியிலும் இந்திய மொபைல் பாகங்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதற்கேற்ப உற்பத்தி 140% அதிகரிக்க உள்ளது. அதாவது எதிர்பார்க்கபட்ட ரூ.50000 கோடி உற்பத்தி இந்த கணக்கு வருட இறுதியில் ரூ.70000 கோடியை தாண்டும்.

அத்துடன் அதற்கேற்ப இந்தத் துறையில் வேலைவாய்பு அதிகரித்து வருகிறது. வரும் 202 ஆம் வருடத்துக்குள் 50 கோடி மொபைல் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் அடுத்த வருடம் இந்த மொபைல் பாகங்கள் உற்பத்தி ரூ.165000 கோடி அளவுக்கு உயரும். அத்துடன் தற்போது 6.7 லட்சம் பேர் பணி புரியும் இந்த துறையில் வேலை வாய்ப்பு 15 லட்சமாக அதிகரிக்கும்” என தெரிவித்துள்ள்ளார்.