புதுடெல்லி: இந்திய வேளாண்மைக்கு திடீர் அச்சுறுத்தலாய் உருவாகியுள்ள வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் கூட்டம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிர்களை தின்று அழித்துள்ளன.

இதனையடுத்து, டிரோன் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்து வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிக திறனுள்ள தெளிப்பான்களை மத்திய வேளாண்மை அமைச்சகம் இறக்குமதி செய்துள்ளது. இவற்றை, விமானப்படையின் எம்ஐ 17 ரகத்தைச் சேர்ந்த 5 ஹெலிகாப்டர்களில் பொருத்தி பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்கும் பணி நடைபெறவுள்ளது.

இதேபோல் 5 டிரோன் நிறுவனங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கும் பணியினை அடுத்த வாரம் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.