டெல்லி: நாடு முழுவதும் கொரோனாதொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், 18வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் ஆலோசனை தெரிவித்து கடிதம் எழுதி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. தினசரி 1 லட்சம் பேர் வரை தொற்று பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளை மத்தியஅரசு அறிவுறுத்தி வருகிறது. அதுபோல தடுப்பூசி போடும் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 7,91,05,163 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை உடனடியாக விரைவு படுத்த வேண்டும் எனவும் 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.