பெங்களூரு: ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியக் குழுவினர், பதக்கங்கள் இந்தியா வந்தடைந்தபோது, அதற்காக சுங்க வரி செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 12 நபர்கள் அடங்கிய இந்தியக் குழுவினர், செக் குடியரசில் நடைபெற்ற ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்டில், இந்திய செஸ் கூட்டமைப்பின் முறையான உதவியின்றியே, தங்கம் வென்று சாதித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்கள் இதை சாதித்தனர்.
அவர்களின் வெற்றியை அடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால், அவர்களுக்கான பதக்கங்கள், ரஷ்யாவிலிருந்து இந்திய வந்தடைந்தபோது, அதற்காக அவர்கள் சுங்கவரி செலுத்த வேண்டியிருந்தது. சுங்கத்துறை அதிகாரிகள், இந்திய அணியின் வெற்றி குறித்து எந்தவித மதிப்பீட்டையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் பெங்களூருவுக்கு பதக்கங்கள் வந்தடைய வெறும் 3 நாட்கள்தான் ஆனது. ஆனால், பெங்களூருவிலிருந்து சென்னை வருவதற்கு ஒரு வாரம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னிடம், அந்த தங்கப் பதக்கங்களுக்கான சுங்க வரியாக ரூ.6300 வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் இந்திய அணியின் துணைத் தலைவர் ஸ்ரீநாத் நாராயணன்.