“தடுப்பூசி போடுவது மட்டுமே மக்களை காப்பாற்ற நம்மிடம் இருக்கும் ஒரே வழி ஆனால் மத்திய அரசு இதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதுடன், அந்த திட்டமே தோல்வி அடையும் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி என்று அறிவிக்கப்பட்ட பின்னர் பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் குறைந்து வருவதை புள்ளிவிவரங்களுடன் அந்த பதிவில் வெளியிட்டுள்ளார்.

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக டெல்லி, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆயினும், எந்தெந்த மாநிலங்களுக்கு அல்லது எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்ற புள்ளிவிவரங்களை சரியாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.