டோக்லாம்

மீபத்திய டோக்லாம் நிகழ்வுக்குப் பின் இந்திய திபேத் எல்லைப்படையில் சேர சீன மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என இந்திய எல்லைக் காவல் படைத்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்தில் எல்லைப் பகுதியான டோக்லாம் பகுதியில் இந்திய மற்றும் சீனப்படைகள் குவிக்கப்பட்டிருந்தன.  பேச்சு வார்த்தைக்குப் பின் இரு தரப்பும் படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.   இந்த படை குவிப்பு நேரத்தில் இரு நாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் எந்த விஷயத்தையும் பரிமாறிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர்.   சீன வீரர்களுக்கு சீன மொழியைத் தவிர வேறு மொழி சிறிதும் தெரியவில்லை.   நமது வீரர்கள் ஆங்கிலம், இந்தி, மற்றும் பல இந்திய மொழிகள் அறிந்துள்ள போதிலும் அந்த இடத்தில் உபயோகப்படவில்லை.

இந்திய திபேத் எல்லைப்படையில் உள்ள 90000 பேரில் சுமார் 150 பேருக்கு மட்டுமே ஓரளவு சீன மொழியான மண்டாரின் தெரிந்திருந்தது.   அவர்களும் ஜவகர்லால் நேரு திறந்த வெளிப் பல்கலைக் கழகத்தில் தனியாக கற்றுக் கொண்டவர்கள்.  எனவே எந்த ஒரு தொடர்புக்கும் இவர்களையே அரசு நாட வேண்டி இருந்தது.  எனவே இதை சரிக்கட்ட இனி வரும் காலங்களில் புதிதாக சேருபவர்களுக்கு சீன மொழியான மண்டாரின் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் எனவும்,  அதே மொழி திபெத்தில் வித்தியாசமாக உச்சரிக்கப் படுவதால் அதைப் பற்றிய மொழி அறிவும் அவசியம் என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

தற்போதுள்ள எல்லைக் காவல் படை வீரர்களுக்கு இந்த மொழியை கற்றுத்தர 12 ஆசிரியர்களை அரசு நியமித்துள்ளது.   இந்த ஆசிரியர்கள் மண்டாரின் மொழியையும்,  அது திபெத் பகுதியில் பேசப்படும் விதத்தையும் பற்றி வீரர்களுக்கு விளக்கி கற்பிப்பார்கள்.   இது அவர்கள் அருணாச்சல பிரதேசம் போன்ற வேறு ஏதேனும் சீன எல்லைக்கு பணி மாற்றம் செய்தாலும் உபயோகமாக இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.