கொல்கத்தா: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரதீப் குமார் பானர்ஜி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

கடந்த 1962ம் ஆண்டு, ஆசிய விளையாட்டுப் போட்டி கால்பந்தில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் இவர். அப்போட்டியில் இவர் கோலும் அடித்தார். இந்திய அணி, தனது இறுதிப்போட்டியில் தென்கொரியாவை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

மேலும், இவர் 2 முறை ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளார். கடந்த 1956ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேல்போர்னில், அந்நாட்டு அணிக்கு எதிராக நடந்த காலிறுதிப் போட்டியில் இவர் இடம்பெற்ற இந்திய அணி 4-2 என்ற கோல்கணக்கில் வென்றது.

மேலும், கடந்த 1960ம் ஆண்டு நடைபெற்ற ரோம் ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய இவர், பிரான்ஸ் அணிக்கெதிரான போட்டியை 1-1 என்ற கோல்கணக்கில் டிரா செய்ய உதவினார். அதன்பிறகு, இந்திய அணி ஒலிம்பிக் கால்பந்தில் இன்றுவரை சாதிக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், 1958, 1962 மற்றும் 1966 என மொத்தம் 3 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு இந்திய கால்பந்து அணிக்காக விளையாடியுள்ளார். ஆசிய விளையாட்டுகளில் அதிகபட்சமாக 6 கோல்கள் அடித்த இந்தியர் என்ற சாதனை இவருக்கானது!