அபுதாபி: இந்தியக் குடியுரிமை விதிமுறைகளை மீறி, விசிட் விசாவில் ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு இந்தியர் யாரும் வரவேண்டாம் என எச்சரித்துள்ளது இந்திய தூதரகம்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; முறையான குடியேற்ற விதிமுறைகளை மதியாமலோ அல்லது அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமலோ, மோசடியான முகவர்களின் பிடியில் சிக்கி ஏமாறும் பெண்கள், துபாயில் பணிசெய்ய விசிட் விசாவில் வந்து, பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
இந்திய குடியேற்ற விதிகளின்படி, 30 வயதுக்கு கீழுள்ள பெண்களுக்கு வீட்டு வேலை பணிக்காக யூஏஇ வருவதற்கு அனுமதியில்லை. அதேசமயம், தகுதியுள்ள பெண்கள் மட்டும், வேலைவாய்ப்பு விசாவின் மூலம் இ-குடியேற்ற சிஸ்டத்தைப் பயன்படுத்தி யூஏஇ செல்லலாம். அதன்மூலம், முறையான சூழலையும், பாதுகாப்பையும் பெறலாம்.
சமீபத்தில், 4 இந்தியப் பெண்கள் விதிமுறைகளை மீறி, மோசடியான ஏஜெண்டுகளின் மூலம், விசிட் விசாவைப் பயன்படுத்தி யூஏஇ வந்து, மோசமான அனுபவங்களை சந்தித்து, நாடு திரும்ப தங்களுக்கு உதவும்படி இந்திய தூதரகத்தை சந்தித்தனர். இதனையடுத்துதான் இந்த எச்சரிக்கை, இந்திய தூதரகம் சார்பில் மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது.