வாஷிங்டன்
இந்தி மொழியை ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இலவச இந்தி வகுப்புக்களை நடத்த உள்ளது.
இந்தி மொழியை ஊக்குவிக்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இம்மொழியை வெளிநாட்டினரிடம் கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இந்த வருடத் தொடக்கத்தில் இலவச இந்தி வார வகுப்புக்கள் தொடரப்பட்டன.
இந்த வகுப்புக்களில் மாணவர்களுக்கு இந்தி மொழியில் அடிப்படையான எழுத்துக்கள், சிறிய வார்த்தைகள், பேச்சுப் பயிற்சி ஆகியவை கற்பிக்கப்பட்டன. இதற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்தது. இதையொட்டி மேலும் 7 நாடுகளில் இந்த வகுப்புக்கள் தொடங்கப்பட்டன. அத்துடன் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் இலவச இந்தி வகுப்புக்கள் தொடங்க உள்ளது.
ஆறு வாரம் நடக்கும் இந்த வகுப்புக்கள் வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ளன. இந்த வகுப்பைத் தூதரகத்தில் உள்ள இந்திய கலாசார ஆசிரியர் மோக்ஸ்ராஜ் நடத்த உள்ளார். இந்த வகுப்புக்களில் சேரும் மாணவர்களுக்கு இந்தி எழுதப் படிக்க மற்றும் பேச பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த வகுப்புக்களின் மூலம் பல்கலைக் கழகத்தில் முழு நேர வகுப்புக்கள் தொடங்க முதல் அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.