வாஷிங்டன்

மெரிக்காவில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் அறிவுரைகளை அளித்துள்ளது.

அமெரிக்காவில் கல்வி பெற மாணவர்கள் இடையே கடும் ஆர்வம் உள்ளது.  அதை பயன்படுத்தி அமெரிக்காவில் பல போலி பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன.   இந்த அனுமதி பெறாத பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு அமெரிக்க நாட்டில் கல்வி பயில தங்குவதற்கு சட்டபூர்வ அனுமதி கிடைப்பதில்லை.

மிச்சிகன் நகரில் உள்ள ஃபார்மிங்டன் பல்கலைக் கழகம் என்னும் போலிப் பல்கலைக் கழகத்தில் நூற்றுக் கணக்கான இந்திய மாணவர்கள் சேர்ந்தனர்  அவர்களுக்கு கல்வி கற்பதற்கான அமெரிக்க அரசு அனுமதி அளிக்கப்படவில்லை.    அதனால் அவர்களில் சிலர் கல்வி அல்லாத பயணம் என அனுமதி வழங்கப்பட்டு தங்கும் கட்டணம் பெறப்பட்டு அமெரிக்காவில் தங்கி உள்ளனர்.

அதே நேரத்தில் பெரும்பாலான மாணவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி வருவதாக கூறி இந்தியாவுக்கு  நாடு கடத்தப்பட்டுள்ளனர்.    இதே நிலை வடக்கு நியு ஜெர்சி பல்கலைக் கழக மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம், “அமெரிக்காவில் கல்வி பயிலும் மாணவர்கள் முதலில் தாங்கள் கல்வி பயில உள்ள பல்கலைக் கழகங்கள் அனுமதி பெற்றவை தானா என்பதை உறுதி ப்டுத்திக் கொள்ள வேண்டும்.    ஒரு பல்கலைக் கழகம் மாணவர் மற்றும் பயணிகள் மாற்றும் திட்டம் என அறிவிப்பதால் மட்டும் அவை அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் ஆகாது.

எனவே இந்திய மாணவர்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.    இதற்கான வழிமுறைகள் இந்திய தூதரகத்தில் கிடைக்கிறது.   அதைக் கொண்டு முழுமையாக சோதித்த பிறகு மாணவர்கள் பல்கலைக் கழகங்களில் சேர வேண்டும்.

அந்த பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் அங்கிகாரம் குறித்த விவரங்கள் திருப்தி அளித்த பிறகே  அவற்றில் மாணவரக்ள் சேர வேண்டும்.   சரியாக சோதிக்காமல் போலிப் பல்கலைக் கழகங்கள் விரிக்கும் வலையில் சிக்க வேண்டாம் என இந்திய மாணவர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்” என அறிவித்துள்ளது.