டெல்லி: டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள்  இன்று முற்பகல் பிரதமர்  நரேந்திர மோடியை லோக் கல்யாண் மார்க்கில்  சந்தித்து கலந்துரையாடினர். அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

ஜூன் 29 அன்று பார்படாஸில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்த நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இந்திய வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட இந்திய வீரர்கள் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். இன்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு வந்த கிரிக்கெட் அணியினருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 16 மணி நேரம் இந்திய அணி வீரர்கள் விமானத்தில் பயணித்து வந்துள்ளனர். இப்பயணத்தில் ஒட்டுமொத்த அணியும் ஆட்டம் பாட்டம் விளையாட்டு நகைச்சுவை என சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து டெல்லிக்கு வருகை தந்த அவர்கள் அங்குள்ள மௌரியா ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினர். அங்கு 5ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம் டி20 உலகக் கோப்பை வடிவில் செய்யப்பட்ட சிறப்பு கேக்கை தயார் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஹோட்டலுக்கு வந்த ரோகித் ஷர்மா மற்றும் சக வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு செல்லும் வழி நெடுக கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு காத்திருந்து தங்களது வாழ்த்துகளை பரிமாறினர்.

 

இதைத்தொடர்ந்து அவர்கள் இரு சொகுசு பேருந்துகள் மூலம், பிரதமர் மோடியை கல்யாண் மார்க்கில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது, கேப்டன் ரோஹித் சர்மாக உலகக் கோப்பையை பிரதமரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, மோடி அளித்த விருந்தில் வீரர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து மும்பை செல்லும் இந்திய வீரர்கள் திறந்தவெளி வாகனத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் பேரணியாக செல்கின்றனர். இந்திய வீரர்கள் கோப்பையுடன் நாரிமன் பாய்ன்ட் பகுதியிலிருந்து மெரைன் டிரைவ் வரை, மேற்கூரை திறந்த பேருந்தில் ஊர்வலமாகச் செல்கின்றனர். பின்னர், மாலை சுமார் 5 மணியளவில் வான்கடே மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.