டெல்லி:  கென்யாவில் அரசுக்கு எதிராக கலவரம் மூண்டுள்ள நிலையில் அங்கு வாழும் இந்தியர்கள், பாதுகாப்பாக இருக்கும்படியும்,  அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றக் கோரியும்  இந்திய தூதரகம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கென்யாவில்  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதிய நிதி மசோதாவால் நாட்டில் பல்வேறு பொருட்கள் மற்றும் அரசு வழங்கி வந்த சேவைகளுக்கு வரி உயர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும்,  நடவடிக்கைகளால்,  மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் என்றும்,  அரசு அறிவித்துள்ள  புதிய வரி உயர்வால் விலைவாசி மேலும் உயரக்கூடும் என மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இதையடுத்து, கென்யா பாராளுமன்றத்தை நோக்கி மக்கள் போராட்டம் நடத்தினர்.  கென்ய தலைநகர் நைரோபியில் இந்த போராட்டம் நடைபெற்றது. இது வன்முறை களமாக மாறியது. இதையடுத்து,   போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசார் ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினார். இதனால், அங்கிருந்து சிதறிய போராட்டக்காரர்கள், அந்த பகுதியில் உள்ள வாகனங்கள் மற்றும்,  நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு  தீ வைத்தனர். மேலும் பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

இதையடுத்து போராட்டம் நடத்திய மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், 5 பேர் கொல்லப்பட்டதாகவும்,  150க்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகாயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  அத்தியாவசிய பணிகள் தவிர்த்து இந்தியர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக  இந்திய தூதரகம்  இந்தியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், கென்யாவில்  தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு,  அங்கு வசிக்கும் அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், அத்தியாவசியமற்ற பணிகளுக்காக வெளியே வருவதை தவிர்க்கவும், நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் ஊடகங்கள் வெளியிடும் செய்தி மற்றும் இணையதளங்கள், சமூக வலைதளங்களை பின்பற்றி அதன்படி பதற்றம் நிலவும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.