பூஞ்ச்

காஷ்மீர் மாநில இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டுச் சட்டப்படி வெளிநாட்டுப் பெண் இந்தியரை மணந்துக் கொண்டால் அந்த அடிப்படையில் அவர் இந்தியக் குடியுரிமை  கோர முடியும் என உள்ளது.  இந்த அடிப்படையில் பல மேல்நாட்டுப் பெண்கள் இந்திய ஆண்களை மணம் புரிந்ததால் இந்தியக் குடியுரிமை பெற்று இந்தியராகவே வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது ஒரு பாகிஸ்தான் பெண் இணைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி மாவட்டமான பூஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் முகமது தாஜ் என்னும் இஸ்லாமியர்.   இவரைப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கதிஜா பர்வீன் என்பவர் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.   இவர் தனக்கு இந்தியக் குடியுரிமை கோரி இந்தியக் குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 5 இன் கீழ் மனு செய்தார்.

கதிஜா பர்வீனுக்கு நேற்று இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.   இந்த குடியுரிமை சான்றிதழை பூஞ்ச் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் நேற்று அவருக்கு வழங்கி உள்ளார்.   இது குறித்து கதீஜா பர்வீன் மற்றும் அவர் கணவர் முகமது தாஜ் ஆகிய இருவரும்  இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்