வாஷிங்டன்
உலகில் அதிக மாசடைந்த நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.
உலக நாடுகள் மத்தியில் காற்று மாசு என்பது அதிக அளவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் மாசடைந்த நகரங்களில் சுமார் 70 லட்சம் பேர் மரணம் அடைவதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. உலகின் மாசடைந்த நகரங்கள் குறித்து உலக பசுமை அமைப்பு கணக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளது. அந்த கணக்கெடுப்பின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.
கணக்கெடுப்பின்படி இந்திய தலைநகர் டில்லி 10 ஆம் இடத்தில் உள்ளது. அதன் அண்டை நகரமான குருகிராம் அடுத்த இடத்தில் உள்ளது. அதிக மாசடைந்த 30 நகரங்களின் பட்டியலில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேச நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
அதிக மாசு பாதிப்பு மற்றும் மக்கள் தொகை விகிதப்படி வங்க தேசம் அதிக பாதிப்படைந்த நாடாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த வரிசையில் உள்ள ஐந்து நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன.
இது குறித்து உலக பசுமை அமைப்பின் தெற்காசிய தலைவர் யெப் சோனோ, “இந்த மாசினால் மனித உயர்களின் இழப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. அத்துடன் மருத்துவச் செலவு மற்றும் பணி இழப்பு ஆகியவைகளால் 22500 கோடி டாலர்கள் இழப்பு உண்டாகிறது. இந்த மாசடைவு என்பது நமக்கு உடல்நலக்குறைவையும் ஏராளமான செலவையும் வரவழைக்கக் கூடியதாகும். நகரங்கள் மாசடைவதை உடனடியாக தடுத்தாக வேண்டும்” என கூறி உள்ளார்.