அமெரிக்கர்களுக்கு அடமான கடன்கள் பெற்றுத் தரும் இடைத்தரகு நிறுவனமான பெட்டர்.டாட் காம் தனது ஊழியர்களில் 900 பேரை ஒரே நேரத்தில் வேலையை விட்டு அனுப்பியது.

உலகம் முழுதும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த அமெரிக்க நிறுவனத்தில் பணி புரிந்து வரும் ஊழியர்களில் 9% சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்குவதாக அமெரிக்க இந்தியரான அதன் செயல் அதிகாரி விஷால் கர்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஊழியர்களுடன் ஜூம் மீட்டிங் வழியாக பேசிய அவர், சந்தை நிலவரம் மற்றும் ஊழியர்களின் வேலைத்திறன் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே இந்த முடிவுக்கு வந்ததாக கூறினார்.

தான் இதுபோல் ஊழியர்களை மொத்தமாக பணியில் இருந்து அனுப்புவது இது இரண்டாவது முறையென்றும், முதல் முறை அதற்காக தான் வருந்தி கண்ணீர் விட்டதாகவும் கூறிய அவர், இம்முறை தன் முடிவில் திடமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்த ஜூம் மீட்டிங் நடவடிக்கையை வீடியோ பதிவு செய்த ஒரு ஊழியர் பெட்டர் நிறுவனம் 15 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால் அது வைரலானது.

இதுகுறித்து விளக்கமளித்து தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால் கர்க், நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலான ஊழியர்களின் திறன் மிகவும் மோசமாக உள்ளதாகவும், வாடிக்கையாளர்களின் பணத்தை இப்படி களவு போக இனியும் அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் இவரது நிறுவனத்தில் புதிதாக 5600 கோடி ரூபாய் முதலீடு செய்த வேறொரு நிறுவனம் குறித்த தகவலை எதிர்பார்த்து காத்திருந்த ஊழியர்களுக்கு, 3 நிமிடத்தில் 900 பேரை பணிநீக்க அறிவிப்புடன் கூடிய விஷால் கர்க்-கின் பேச்சு அடங்கிய நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், கொரோனா பரவலுக்குப் பின் நகரங்களை விட்டு பண்ணை வீடுகளை விரும்பும் அமெரிக்கர்கள் அதிகரித்துள்ளதால் அதனை சமாளிக்க 58000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட பங்கு பத்திரங்கள் வெளியிடப்போவதாக இந்த ஆண்டு மே மாதம் பெட்டர் டாட் காம் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.