கேன்பெரா:

ஆஸ்திரேலியாவுக்கு காமன் வெல்த் போட்டி செய்தி சேகரிக்க போலி மீடியா குழுவினராக 8 பயணிகளை அழைத்து சென்ற இந்தியர் ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் கோல்டுகோஸ்ட்டில் காமல் வெல்த் போட்டிகள் வரும் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிஸ்பேன் விமானநிலையத்தில் 9 பேர் கொண்ட குழுவினரை எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் காமன் வெல்த் போட்டி குறித்த செய்தி சேகரிக்க வந்த மீடியா குழுவினர் என்று தெரிவித்துள்ளனர். தொடர் விசாரணையில் அது போலி என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருந்து தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா வந்த அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 8 பேர் போலி வெளிநாட்டு மீடியா குழுவினர் என்பது தெரியவந்தது.

இவர்களை 46 வயது இந்தியர் ஒருவர் ஒருங்கிணைத்து அழைத்து வந்துள்ளார். அவர் மீது குவின்ஸ்லாந்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆட்கடத்தல், போலி ஆவணம் வைத்திருத்தல், வெளிநாட்டினரை தவறாக வழிநடத்துதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபனம் ஆனால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் சுமார் 20 ஆணுடுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். வரும் ஏப்ரல் 6ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதர 8 பேர் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.