ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பனி மற்றும் குளிர் அலைகளில் சிக்கி தவித்த 488 பேரை விமானப்படையினர் மீட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு பகுதி முழுவதும் பனிப் பொழிவு மற்றும் பனி அலை வீசி வருகிறது. இதில் லேஹ் மற்றும் கார்கில் பகுதிகளை சேர்ந்த மக்கள் ஜம்மு மற்றும் உதம்பூரில் சிக்கி தவித்தனர். இதையடுத்து அவர்களை மீட்க இந்திய விமானப் படையின் உதவியை அரசு நாடியது. கஜ்ராஜ் என்ற ஐஎல்&76 ரக விமானம் இந்த சிறப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த 6ம் தேதி 239 பேரும், 7ம் தேதி 249 பேரும் உதம்பூரில் இருந்து விமானப் படை விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் விமானப்படை தளத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்களும் தொழில்நுட்ப பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் இது வரை 955 பேரை இந்திய விமானப் படையினர் மீட்டுள்ளனர். பிப்ரவரி 27ம் தேதி 234 பேர் லடாக் பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர். பிப்ரவரி 19ம் தேதி 233 பேர் லேஹ், கார்கில் பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர்.