நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஏப்.28) விசாரணைக்கு வந்தது.

இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ”கடந்த சனிக்கிழமை இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக ஷங்கர் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், அதைத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஏற்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் ஜூன் மாதத்தில் படத்தை முடிக்க வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.