புனே: இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரை வென்று கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா. மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில், முதல் ஆட்டம் மழையால் ரத்தாகவே, இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா வென்று தொடரில் முன்னிலை பெற்றது. எனவே, கோப்பை யாருக்கு? என்பதைத் தீர்மானிக்கும் 3வது போட்டி புனேயில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ராகுலும் தவானும் நல்ல துவக்கம் தந்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர். இருவரும் மொத்தமாக சந்தித்த பந்துகள் 36 என்பது குறிப்பிடத்தக்கது.
மணிஷ் பாண்டே 31 ரன்களும், விராத் கோலி 26 ரன்களும்(ரன் அவுட்) மற்றும் ஷர்துல் தாகுர் 22 ரன்களும் அடித்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களைக் குவித்தது.
பின்னர், களமிறங்கிய இலங்கை அணிக்கு தனஞ்செயா சில்வா மட்டுமே 57 ரன்கள் அடித்து நம்பிக்கைக் கொடுத்தார். அவர் சந்தித்த பந்துகளும் 36தான். ஆஞ்சலோ மேத்யூஸ் 31 ரன்களை அடித்தார். வேறு எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களைத் தொடவில்லை.
இறுதியில் 15.5 ஓவர்களிலேயே, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களுக்கு ஆட்டத்தை முடித்துக்கொண்டது இலங்கை அணி. இப்போட்டியில் அரைசதம் அடித்த 3 வீரர்களும் சந்தித்த பந்துகள் 36 என்பது கவனிக்கத்தக்கது.
இந்திய தரப்பில் சைனி 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகுர் மற்றும் வாஷிடங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பும்ராவுக்கு 1 விக்கெட் மட்டுமே கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.