மான்செஸ்டர்:

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் ஆட்டமத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் துவக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பாக ஆட, அணியின் ரன் ரேட் சீராக உயர்ந்தது. மேலும் இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது.

லோகேஷ் ராகுல் 57(78) ரன்களில் கேட்ச் ஆனார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உடன் கைகோர்க்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

தொடர்ந்து பாகிஸ்தான் பந்து வீச்சை தெறிக்கவிட்ட ரோகித் சர்மா, நடப்பு உலக கோப்பை தொடரில் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா, 3 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன், 113 பந்துகளில் 140 ரன்கள் குவித்த நிலையில் கேட்ச் ஆனார்.

அதன்பின் களமிறங்கி சிறிது அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 26(19) ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி 1(2) ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சிறப்பாக ஆடி தனது அரை சதத்தை பதிவு செய்த விராட் கோலி 77(65) ரன்களில் கேட்ச் ஆனார். அப்போது போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது

இறுதியில் விஜய் சங்கர் 15(15) ரன்களும், கேதர் ஜாதவ்  9(8) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது அமிர் 3 விக்கெட்டுகளும், வஹாப் ரியாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சார்பில் இமாம்-உல்-ஹக் மற்றும் பக்தர் சமான் ஆகியோர் களமிறங்கினர்.

அதில் இமாம்-உல்-ஹக் 7(18) ரன்களில் வெளியேற, பக்தர் சமானுடன், பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது.

இந்த ஜோடியில் பாபர் அசாம் 48(57) ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பக்தர் சமான் தனது அரை சதத்தை பதிவுசெய்திருந்த நிலையில் 62(75) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய முகமது ஹபீஸ் 9(7) ரன்களும், ஷாகிப் மாலிக் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் வெளியேறினர்.

அடுத்ததாக கேப்டன் சர்பரஸ் அகமது 12(30) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக இமாத் வாசிமுடன், சதாப் கான் ஜோடி சேர்ந்தார்.

இந்நிலையில், 35-வது ஓவரில் மழை குறுக்கிட்டது. பின்னர் டி.எல்.எஸ் முறைப்படி பாகிஸ்தான் அணிக்கு 40 ஒவர்களில் 302 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி 30 பந்துகளில் 136 எடுக்க வேண்டிய சூழ்நிலை பாகிஸ்தான் அணிக்கு உருவானது.

இறுதியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாத் வாசிம் 46(39) ரன்களும், சதாப் கான் 20(14) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் பாகிஸ்தான் அணி 40 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இதுவரை பாகிஸ்தானுடன் விளையாடிய 7 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.