இந்தூர்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியா 2-:0 என முன்னிலை வகித்தது. 3வது போட்டி ம.பி. இந்தூர் இன்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் கார்ட்ரைட், மாத்யூ வேட் நீக்கப்பட்டு ஆரோன் பின்ச், ஹேண்ட்ஸ்கோம்ப் வாய்ப்பு பெற்றனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் (27), ஆஷ்டன் ஏகார் (9) அவுட்டாகாமல் இருந்தனர். பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு ரோகித், ரகானே ஜோடி அதிரடி தொடக்கம்ம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தபோது ரோகித் (71) ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் பந்தில் ரகானே (70) அவுட்டானார். கேப்டன் கோஹ்லி(28), கேதார் ஜாதவ்(2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின் மணீஸ் பாண்டேவுடன் இணைந்த பாண்ட்யா அதிரடியாக விளையாடினார். வெற்றிக்கு 10 ரன்கள் மட்டும் தேவையாக இருக்கும் போது 4 சிக்சர்களுடன் அரைசதம் கடந்த பாண்ட்யா 78 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 47.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மணீஸ் பாண்டே 36 ரன்களுடனும், தோனி 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-:0 என்ற கணக்கில் தொடரை வென்றது.