லண்டன்:
சர்வதேச கடல்சார் அமைப்பின் கவுன்சில் (ஐஎம்ஓ) தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கடல்சார் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா கலந்து கொண்டார். ஜெர்மனி 146 வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.
‘பி’ பிரிவில் இந்தியா 144 வாக்குகளைப் பெற்று 2வது இடத்தைப் பிடித்தது. ஆஸ்திரேலியா 143 வாக்குகள் பெற்று 3வது இடத்தையும் பிடித்தன. சர்வதேச கடல்சார் அமைப்பு, நாடுகளுக்கு இடையே கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த அமைப்பில் இந்தியா 1959-ம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ளது. சில தினங்களுக்கு முன் லண்டன் சென்றிருந்தபோது, சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைமையகத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினார்.
அப்போது, அவர் பேசுகையில், ‘‘கடல்சார் அமைப்பின் தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றால், அந்த அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற இந்தியா மீண்டும் ஒத்துழைப்பு அளிக்கும்’’ என்று தெரிவித்திருந்தார்.