பாட்னா
எடியூரப்பாவின் ராஜினாமாவினால் 2019ல் பாஜக இல்லாத பாரதம் உருவாகும் என உறுதியாகி உள்ளதாக லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதை அறிந்துக் கொண்டதால் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு நாடெங்கும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், “வெகுநாட்களாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் வரும் 2019ல் பாஜக இல்லாத பாரதம் உருவாக வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். தற்போது கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி இதை உறுதிப்படுத்தி உள்ளது. பாஜக அரசியல் சட்டத்துக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடந்து வருவதன் மூலம் ஜனநாயகத்துக்கு தங்கள் கட்சி எதிரானது என்பதை உறுதிப்படுத்தி விட்டது.
கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் இணைந்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் 2019 பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி என்பது மிகவும் கடினம் என்பது தற்போது நன்றாக தெரிந்து விட்டது. இதே போல ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மற்றும் சத்திஸ்கர் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களிலும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அவசியம் தேவை.” என தெரிவித்துள்ளார்.