இந்தூர்: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி இந்தூரில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் குசால் பெரரா மட்டுமே அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். ஃபெர்ணான்டோ 22 ரன்களையும் குணதிலகா 20 ரன்களையும் எடுத்தனர்.

20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை அணி. இந்தியா தரப்பில் தாகுர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் சைனி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர், சாதாரண இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், துவக்க வீரர் ராகுல் 45 ரன்களும் தவான் 32 ரன்களும் அடித்தனர். ஷ்ரேயாஸ் 34 ரன்கள் அடிக்க, கேப்டன் விராத் கோலி 30 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கையின் ஹசரங்காவுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன. முடிவில், 17.3 ஓவர்களிலேயே, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது இந்தியா.

தற்போது, 3 போட்டிகள் கொண்ட இந்த டி-20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.