பே ஓவல்: ஐந்தாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில், நியூசிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஷ்ரேயாஸின் சொதப்பலால் 20 ஓவர்களில் 163 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து, 17 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தாலும், பின்னர் சூதாரித்து ஆடியது. டிம் செஃபர்ட்டும் ராஸ் டெய்லரும் இணைந்து அணியை மீட்டெடுத்தார்கள். அவர்கள் இருவருமே அரைசதம் அடித்தார்கள்.
ஆனால், 50 ரன்களில் டிம் அவுட்டானவுடன் நிலைமை அப்படியே மாறியது. மற்ற எந்த வீரரும் டெய்லருடன் நிலைத்து நிற்கவில்லை. இதனால், செய்வதறியாது திகைத்த டெய்லர் 53 ரன்களுக்கு அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் இஷ் சோதி சற்று போராடினார். அவர் 16 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 159 ரன்களை மட்டுமே எடுத்தது.
இன்றைய நாள் பும்ராவின் நாளாக அமைந்தது. 4 ஓவர்களை வீசிய அவர், வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சைனி மற்றும் தாகுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஆல்ரவுண்டர் என்ற பெயரில் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்று, தொடர்ந்து மோசமாக ஆடிவரும் ஷிவம் துபேவின் பந்து வீச்சுதான் இன்றைய ஹைலைட்.
1 ஓவர் மட்டுமே வீசிய அவர், வாரிய வழங்கிய ரன்கள் 34. விக்கெட் எதுவும் இல்லை. இவர் இன்னும் 2 ஓவர்கள் வீசியிருந்தால் நியூலாந்து எப்போதோ ஆட்டத்தை முடித்திருக்கும்.
நியூசிலாந்தில் டி-20 பெர்ஃபார்மன்ஸை மோசமாக வைத்திருந்த இந்திய அணி, இந்த ஒயிட்வாஷ் வெற்றியின் மூலம் தனது கறையைப் போக்கிக்கொண்டது!