டெல்லி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக உள்ள இந்தியா, வரும் ஆகஸ் டு மாதம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பினை ஏற்க இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு ஐக்கிய நாடுகள் சபை செயல்பட்டு வருகிறது. ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த ஆண்டு (2020) ல் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. அதையடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக, இந்தியா பொறுப்பேற்றதுடன், பாதுகாப்பு கவுன்சிலிலில் இந்திய தேசியக் கொடி 2021 ஜனவரியில் பொருத்தப்பட்டது.
எட்டாவது முறையாக பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்றைய கொடி நிறுவல் விழாவில் பங்கேற்பது பெருமைக்குரியது என்று ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்தார். இதற்கு முன், தற்காலிக உறுப்பினராக இந்தியா இருந்ததை விட, தற்போது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. தற்காலிக உறுப்பினராக இந்தியாவின் செயல்பாட்டை, உலக நாடுகள் கண்காணிக்கும். சர்வதேச அளவில், இந்தியாவை ஒரு சக்தி மிக்க நாடாக மாற்ற, இந்த இரண்டு ஆண்டு பதவி காலம், ஒரு வாய்ப்பாக கிடைத்துள்ளது என கூறப்பட்டது.
இந்த நிலையில், வரும் ஆகஸ்டு மாதம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பினை இந்தியா ஏற்க இருப்பதாக இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
இதன் காரணமாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற இந்தியாவின் எண்ணம் நிறைவேற வாய்ப்பு கிடைத்துள்ளது. தலைமை பொறுப்பேற்க உள்ள இந்தியாவுக்கு, ஒரு நாட்டின் மீதான மற்றொரு நாட்டின் அத்துமீறல்கள், ஆக்கிரமிப்புகள், சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு, பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை, தெற்காசியா மற்றும் ஆசிய – பசிபிக் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவது உட்பட பல பொறுப்புகள் உள்ளன.