டெல்லி: நாடு முழுவதும் செப்டம்பர் 30ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் ஓயவில்லை. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. இந் நிலையில், பொதுமுடக்கம் அன்லாக் 4.0 விதிகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும். திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும். செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 100 பேருடன் அரசியல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
மத்திய அரசின் அனுமதி இல்லாமல் உள்ளூர் அளவில் ஊரடங்கு பிறப்பிக்க மத்திய அரசு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாநில, மாவட்ட, கோட்ட, நகர, கிராம அளவிலான ஊரடங்குகளை மாநில அரசுகள் பிறப்பிக்க கூடாது. 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் விரும்பினால் பள்ளி செல்லலாம். அவர்களின் பெற்றோர், காப்பாளர் எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளிப்பதன் அடிப்படையில் மட்டுமே இதை அனுமதிக்க வேண்டும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்.30 வரை முழு ஊரடங்கு தொடரும். வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை நீடிக்கிறது. 50 சதவீதம் ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என பல தளர்வுகள் மற்றும் வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.