புதுடெல்லி: அன்கிதாஸ் என்ற முகநூல் நிறுவன அதிகாரிக்கு அடுத்து, அந்நிறுவனத்தின் மற்றொரு அதிகாரியும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாய் செயல்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஷிவ்நாத் துக்ரால் என்ற முகநூல் நிறுவனத்தின் லாபியிஸ்ட், இந்துத்துவ சக்திக்கு ஆதரவாக செயல்பட்ட விஷயத்தை, புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பதிவிட்டிருந்த துவேஷக் கருத்து தொடர்பாக நடைபெற்ற அலுவல்ரீதியான கூட்டத்திலிருந்து ஷிவ்நாத் வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கருத்து சம்பந்தமான விவாதத்திற்கு பதிலாக, முஸ்லீம் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட ஒரு இளம் பெண் விவகாரத்தை அவர் கொண்டுவந்தார் என்றும், எப்படி வங்கதேச முஸ்லீம்கள் நமது மக்களை(இந்தியர்கள்) குறிவைக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அந்த கலந்துரையாடல் சந்திப்பிற்கு பிறகும், அந்த பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர் பதிவிட்ட கருத்து, ஒரு ஆண்டாக தொடர்ந்து முகநூலிலேயே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், அந்த கருத்தை நீக்காமல் விட்டது தங்கள் தவறுதான் என்று முகநூல் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவான முகநூல் அதிகாரிகளின் பெயர்கள் ஒவ்வொன்றாக வெளியாவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.