டில்லி,
இந்தியா – இஸ்ரேல் நாடுகளிடையே இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம் உற்பத்தி உள்பட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
15 ஆண்டுகளுக்கு பிறகு 6 நாள் பயணமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்திய வந்துள்ளார். இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கடந்த 14ந்தேதி தனது மனைவி சாராவுடன் இந்தியா வந்துள்ள நெதன்யாகுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அதைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இஸ்ரேல் நாட்டின் மூத்த அமைச்சர்கள் அடங்கிய உயர்நிலைக் குழுவினரும் கலந்து கொண்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சர்வதேச சூழல், பிராந்திய பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா – இஸ்ரேல் இடையே . இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம், வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர் பாக 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது நெதன்யாகு “இந்தியா – இஸ்ரேல் மக்களிடையே கலாசார பரிமாற்றத்தை உருவாக்குவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய நமது உறவுகள் மேலும் பலப்படும்” என்றார் .