டில்லி

ந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை 13 நாடுகளுக்கு அனுப்ப உள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்படுத்தலாம் எனப் பல நாடுகள் அறிவித்துள்ளன.  இந்த மருந்து இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.  இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் சென்ற மாதம் இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.

அதையொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மருந்தை அமெரிக்காவுக்கு அனுப்பாவிடில் இந்தியா அதன் விளைவுகளைச் சந்திக்க  நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். இந்திய அரசு அவசர நிலையைக் கருதி ஏற்றுமதி தடையை நீக்கியது.  மேலும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தைத் தயாரிக்கும் நிறுவனம் போதிய அளவு உற்பத்தி உள்ளதால் தட்டுப்பாடு வராது என உறுதி அளித்தது.

அதன் பிறகு இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை 13 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.  இதில் அமெரிக்கா கேட்டிருந்த 48 லட்சம் மாத்திரைகளில் 35.82 லட்சம் மாத்திரைகள் அனுப்பப்படுகிறது.  அதைத் தவிர இந்த 8 டன் எடையுள்ள  மாத்திரையின் மூலப் பொருள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது.

பிரேசில் மற்றும் கனடாவுக்கு ஏற்கனவே 0.53 மூலப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மேலும் 50 லட்சம் மாத்திரைகள் அனுப்பப்பட உள்ளன.  இதைப் போல் வங்க தேசத்துக்கு 20 லட்சம், நேபாளத்துக்கு 10 லட்சம், பூட்டானுக்கு 2 லட்சம், இலங்கைக்கு 10 லட்சம், ஆப்கானிஸ்தானுக்கு 5 லட்சம் மற்றும் மாலத்தீவுகளுக்கு 2 லட்சம் என ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் அனுப்பிட உள்ளன.

இதைத் தவிர ஜெர்மனிக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் 50 லட்சமும் அதற்கு முன்பாக மூலப் பொருள் 1.5 டன்னும் இந்தியா அனுப்ப உள்ளது.