புவனேஸ்வர்

ந்த மாதம் 4 அணு ஆயுதம் தாங்கும் ஏவுகணை சோதனைகளை  நடத்த இந்தியா தயாராகி வருகிறது..

இந்தியா தொடர்ந்து ஆயுதம் தாங்கும் ஏவுகணைகளை உற்பத்தி செய்து வருகிறது.   இந்த ஏவுகணை உற்பத்தியில் ரஷ்யாவும் பங்கேற்றுள்ளது.   இது வரை 5 ஏவுகணை சோதனைகள் நடைபெற்றுள்ளன.    இவற்றில் இரண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களிலும் ஒரு சோதனை செப்டம்பர் மாதத்திலும் நடைபெற்றுள்ளன.   இவை நிலம் மற்றும் கடலில் உள்ள இலக்குகளை நோக்கி ஏவப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளன.

இவ்வரிசையில் இந்த மாதம் 4 ஏவுகணை சோதனைகள் நடைபெற உள்ளன.  இந்த நான்கு ஏவுகணைகளும் வெவ்வேறு தூரத்தைத் தாக்கக் கூடியவை ஆகும்.    இந்த ஏவுகணைகள் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களையும் தாக்கும் அளவுக்குத் திறன் கொண்டதாகும்.

இந்த ஏவுகணைகள் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் செலுத்தப்படும் கே 4, பிரமோஸ், அக்னி 2 மற்றும் பிரித்வி வகையை சேர்ந்தவைகள் ஆகும்.  இதில் கே 4 ஏவுகணை 3500 கிமீ தூரம் தாக்கக் கூடியதாகும்.  இது நவம்பர் 8 ஆம் தேதி சோதிக்கப்பட உள்ளது.  அடுத்ததாக 300 கிமீ தூரம் தாக்க வல்ல பிரமோஸ் ஏவுகணை நவம்பர் 11 ஆம் தேதி அன்று சோதனை  செய்யப்ப்ட உள்ளது.

மேலும் நவம்பர் 16 ஆம் தேதி அன்று 2000 கிமீ தூரம் தாக்க உள்ள அக்னி 2 ஏவுகணையும் நவம்பர் 20 ஆம் தேதி 350 கிமீ தூரம் தாக்க உள்ள பிரித்வி ஏவுகணையும் சோதிக்கப்படுகின்றன.    இவை அனைத்தும் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வல்லமை உடையதாகும்.     இந்த சோதனைக்கான பணிகள் ஒரிசா மாநிலத்தில் மும்முரமாக நடந்து வருகின்றன.  இதில் கே 4 மற்றும் அக்னி 2 ஆகியவை மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் உடையதாகும்.