புதுடெல்லி: முதன்முறையாக எச்எஸ்டிடிவி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹைபர்சோனிக் தொழில்நுட்ப செயல்முறை வாகனத்தை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது இந்தியா.
இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீன ஆகிய நாடுகளின் கிளப்பில் இந்தியாவும் இணைந்துள்ளது.
ஒடிசாவின் கடற்கரையில் இந்த சசோதனை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை தயார்செய்துவிட்டால், சீனாவின் எந்தவித பாதுகாப்பு அமைப்பையும் தோற்கடிக்க முடியும் என்று கூறுகின்றனர் இந்திய விஞ்ஞானிகள்.
இன்றைய சோதனையை மேற்கொண்டு, டிஆர்டிஓ அமைப்பு, இதை ஒரு வரலாற்று சிறப்புமிக்க சம்பவமாக வர்ணித்துள்ளது. மேலும், பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் சுயசார்பை நோக்கியப் பயணத்தில் இதுவொரு மாபெரும் பாய்ச்சல் என்றும் கூறப்பட்டுள்ளது.
“இந்த சோதனை, பல நுட்பமான மற்றும் சிக்கலான தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் ஹைபர்சோனிக் வாகனங்களுக்கான பாதையைத் திறந்துவிட்டுள்ளது. இந்த சோதனையின் மூலமாக, இதுவரை இந்த சோதனையை மேற்கொண்ட வெகுசில நாடுகளின் வரிசையில், இந்தியாவும் இணைந்துகொண்டுள்ளது” என்றுள்ளார் டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி.
டிஆர்டிஓ மேற்கொண்ட இந்த சாதனையை, பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டியுள்ளார்.