அந்தமானில் வசிக்கும் ஜாரவா பழங்குடி இன மக்களின் நிர்வாண வீடியோ காட்சிகளை அகற்றும்படி யூ டியூப் இணைய தளத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.
.அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பிற மனிதர்களின் தொடர்பே இல்லாத பழங்குடி இனத்தவர் இன்றும் வாழ்கிறார்கள். இவர்கள் இன்றும் ஆதிவாசிகளாவே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆடை அணிவதில்லை. வேட்டையாடி உண்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை சுமார் 28,077 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் (பாதுகாக்கப்பட்ட பழங்குடியினர்) ஒழுங்குமுறை 1956-ஆம் ஆண்டு விதிகளின்படி அந்தமானியர்கள், ஜாரவாக்கள், ஒங்கே, சென்டிலீஸ், நிகோபாரீஸ் மற்றும் ஷோம் பென்ஸ் ஆகிய இனத்தவர்கள், பழங்குடியினர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த இனத்தவர்களை வெளியில் உள்ளவர்களின் தலையீட்டில் இருந்து காப்பதற்காக விதிகள் உள்ளன.
அதாவது இவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்பவர்களுக்கு மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
தவிர, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 3 (ஐ)(ஆர்)- ஆவது பிரிவின்படியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் சுற்றுலா பயணிகள் பலர், சட்டத்துக்குப் புறம்பாக இந்த பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்வதும், அவர்களை ஒளிப்படம் எடுப்பதும் நடந்து வருகிறது.
இந்த பழங்குடியினர் ஆடை அணிவதில்லை. இவர்களை ஒளிப்படம் மற்றும் வீடியோ எடுத்த சிலர் இவற்றை யு டியுப் வலை தளத்தில் பதிவேற்றி உள்ளனர். யூ டியூபில் உள்ள 20 விடியோக்கள் ஜாரவாக்களை பாதுகாக்க உதவும் சட்ட விதிகளை மீறுவதாக இருப்பதாக தெரியவந்துள்ளது
இந்த விவகாரத்தை தேசிய பழங்குடியினர் ஆணையம் (என்சிஎஸ்டி) தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது.
யூடியூப் சமூக ஊடகத்தில் உள்ள அந்த விடியோக்களை நீக்குவது குறித்து இந்திய உள்துறை, வெளியுறவுத் துறை, தகவல் ஒலிபரப்புத் துறை, பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகங்களிடம் என்சிஎஸ்டி முறையீடு செய்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய பழங்குடியினர் ஆணைய செயலாளர் ராகவ் சந்திரா, “வீடியோ காட்சியில் பாதுகாக்கப்பட்ட பழங்குடியினரை நிர்வாண கோலத்தில் சுற்றித்திரிந்து விளையாடுவது போல இருக்கிறது. அவை உரிய அனுமதியின்றி அவை எடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்திருக்கிறது. ஆகவே அக் காட்சிகளை நீக்க யு டியூப் நிர்வாகத்திடன் கேட்டுக்கொண்டிருக்கிறோம்” என்றார்.