டில்லி

ந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பிய இந்திய அரசு பாகிஸ்தானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நேற்று விடுமுறை முடிந்து சுமார் 2500க்கும் மேற்பட்ட சி ஆர்  பி எஃப் வீரர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நகருக்கு 78 வாகனங்களில் சென்றுக் கொண்டிருந்தனர்.    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் அவர்கள் சென்றுக் கொண்டிருந்த போது 350 கிலோ வெடி மருந்துடன் வந்த தீவிரவாதி தனது ஸ்கார்ப்பியோ வாகனத்தை மோதியதில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.   நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த பயங்கர வாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தீவிரவாதக் குழுவான ஜெய்ஷ் ஈ முகமது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.   இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் அனைத்து தலைவர்கள் மட்டுமின்றி உலகத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரான சோகைல் முகமதுக்கு இந்திய அரசு சார்பில் வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே சம்மன் ஒன்றை அனுப்பி உள்ளார்.   அத்துடன் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கர வாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தூதரிடம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்திய அரசு பாகிஸ்தானுக்கு அளித்து வந்த வர்த்தக சலுகைகளை ரத்து செய்துள்ளது தெரிந்ததே.