புவனேஸ்வர்:
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி 3 ஏவுகனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. ஒடிசா கடற்கரையில் அப்துல் கலாம் தீவில் நடமாடும் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.15 மணிக்கு இந்த பரிசோதனை நடந்தது.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பினர் சார்பில் பயிற்சி அளிக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த சோதனை நடந்தது. விஞ்ஞாணிகள், ராணுவ அதிகாரிகள் சோதனையை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்தனர்.
சுமார் 500 கி.மீ. தொலைவு உயரத்திற்கு ஏவுகணை சீறி பாய்ந்து சென்று இலக்கை தாக்கியது. திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடந்து முடிந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பரிசோதனை மூலம் தொழில்நுட்ப ரீதியாக இந்தியா மீண்டும் தனது பலத்தை நிரூபித்துள்ளது.
ஏவுகனை பாதையில் விமானங்களின் குறுக்கீடு இருந்தால் அதற்கு ஏற்ப மாற்றங்களை கம்ப்யூட்டர் மூலம் செய்யும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இந்த சோதனையை கப்பல் படையின் 2 கப்பல்கள், பல தொலைநோக்கி மையங்கள், கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டது.
இந்த ஏவுகனை 1.5 டன் எடையுள்ள 17 மீட்டர் உயரம் கொண்டு அணு மற்றும் அணு அல்லாத ஆயுதங்களை தாங்கி செல்லும். 2 மீட்டர் சுற்றளவு கொண்ட இதில் 50 டன் வெடி பொருட்கள் சுமந்து செல்லும் தன்மை கொண்டது. இந்த பரிசோதனை குறித்து கப்பல், விமானங்களுக்கு ஏற்கனவே முன் எச்சரிக்கை அறிவிப்புகள் அனுப்பட்டிருந்தது.