டெல்லி: உக்ரைனில் இருந்து இதுவரை 76 விமானங்களில் 15,920 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. போர் 10 நாட்களை கடந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை மீட்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்திய மாணவர்களை மீட்கும் ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு, அங்கு சிக்கியுள்ளவர்களை மத்திய அரசு மீட்டு அழைத்து வருகிறது. அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அங்குள்ள தூதரக அதிகாரிகளின் வழிகாட்டுதல் மூலம் அண்டை நாடுகளுக்கு வந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர். இதற்காக 4 மத்திய அமைச்சர்களும் எல்லை நாடுகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, உக்ரைனில் இருந்து இதுவரை 15,920 இந்திய மாணவர்கள் 76 விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு தாய் நாடு அழைத்து வரப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
ருமேனியா வழியாக- 6680 (31 விமானங்கள்) பேரும், போலந்து வழியாக 2822 பேரும் (13 விமானங்கள்), ஹங்கேரி வழியாக 5300 (26 விமானங்கள்) பேரும்,
ஸ்லோவாக்கியா வழியாக 1118 (6 விமானங்கள்) பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
இன்னும் அங்கு சிக்கி உள்ள மாணவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருவதாக தெரிவித்தவர். உக்ரைனில் சிக்கி இருக்கும் கடைசி இந்திய மாணவரை மீட்கும் வரை நடவடிக்கை தொடரும்” என்றும் தெரிவித்தார்.