கடுமையான சூழல்கள் மற்றும் சவால்களுக்கு இடையே, இந்திய அணி பிரிஸ்பேன் சென்றடைந்துள்ளது. ஆனால், அங்குள்ள நிலையோ அதைவிட படுமோசம்!
பிரிஸ்பேன் பகுதியில், கொரோனா பெரியளவில் பரவி வருகிறது. இதனால், அம்மாகாணத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் சில வசதிகள் குறித்த வாக்குறுதி வழங்கப்பட்டதாலேயே, அங்கு, தயக்கத்திற்கு பிறகு சென்றடைந்துள்ளது. ஆனால், இந்திய அணி தங்கும் ஹோட்டலில் எந்த வசதியும் இல்லாத சூழல். இது, ஏற்கனவே காயத்தால் கடுமையாக அவதிப்பட்டுவரும் இந்திய அணியை, மனரீதியாக மீண்டும் பலவீனப்படுத்தும் ஒரு செயலே!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதையெல்லாம் திட்டமிட்டு செய்கிறதா? என்று தெரியவில்லை. சிட்னி டெஸ்ட்டிற்கு முன்னதாகவே, சில கெடுபிடிகளை இந்திய அணியினர் மீது சுமத்தினர் ஆஸ்திரேலியர்கள். அப்போதே, இந்தியா சார்பில் கோபக்குரல்கள் எழுந்தன.
பின்னர், சிட்னி டெஸ்ட் ஒருவழியாக நடந்து முடிந்தது. அந்த சிட்னி டெஸ்ட்டில், இந்திய வீரர்கள் நிறவெறி வசைபாடல்களுக்கு ஆளானார்கள். முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவது, மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களைத் தாண்டி, சிட்னி டெஸ்ட்டை டிரா செய்தனர் இந்திய அணியினர்.
இந்நிலையில், பிரிஸ்பேனில், இந்திய அணியினருக்கான அடிப்படை வசதிகளில் மிக மோசமான குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் உளவியல் இன்னும் பலவீனமடைய வாய்ப்புள்ளது.
எனவே, இத்தொடரை இத்துடன் முடித்துக்கொண்டு, இந்திய வீரர்கள் நாடு திரும்புவதே சரியான முடிவாக இருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.